Tuesday, April 21, 2015

பெருவேட்டை:


நாணிலிருந்து
வெடித்துக் கிளம்பும் விசையுடன்
இழுத்து நிறுத்தப் பட்டிருக்கும்
அம்பின் திசையின் முடிவில்
ஆழமாய் பார்வையைப் பதிந்தபடி
அவனோடு நானிருக்க...

எங்கிருந்தோ
கவனிக்கப் படுவதைக்
கணித்துவிட்ட போதிலும்...
இயலாமையில்
உடல்துடிக்க
கண்கள் மருள
காதுகள் சுழல
கால்கள் நடுங்க
ஓரடி நகராமல்
இலக்கது திகைக்க...

பனிக்குடத்துள்ளிருந்து
நுனிமூக்கோடு இறுக்கமாய்
முன்ன்ங்கால் குளம்பும்
ஒன்றாய் வெளிவர....
எப்படியும் தரையைத்
தொட்டுவிடும் உறுதியில்
மறியது விடைக்க...

உறைந்து போகிறேன்

”வேட்டைக்கு வந்தபிறகு
வேட்கையில் குறைவென்றால்
கோட்டைவிட வேண்டிவரும்”
உறுமுகிறான் அவன்
”விடு வில்லை” என்று

விடவில்லை நான் ...

ஆனாலும் அங்கே
மரித்துப்போனது
மிருகம் ஒன்று!

4 comments:

தனிமரம் said...

மிருகம் விடுவதில்லை. கவிதை அருமை .

Unknown said...

வேட்டைகென்று வந்துவிட்டால் அங்கு சமரசத்துகிடமில்லை ...! மிருகத்தனம் வீழ்ந்தால் இலாபம். ( விடுவில்லை ...விடவில்லை ...சிலேடை அருமை )

duraian said...

// தனிமரம் // மிக நன்றி ஐயா

duraian said...

/// HAROON RASHEED // மிக மிக நன்றி